லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் கிடு கிடு சரிவு

லட்சுமி விலாஸ் வங்கிக்கு போறாத காலம் இன்னும் நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த வங்கியின் பங்குகள் 53 சதவீதம் குறைந்துவிட்டது.அதிகளவிலான வராக்கடன், நிர்வாகக் குழுவில் தொடரும் சிக்கல்கள் என லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகம் மோசமான நிலையை அடைந்ததால் ரிசர்வ் வங்கி தலையிட்டு இயக்கத் தடை விதிக்கப்பட்டது முதல் லட்சுமி விலாஸ் வங்கி மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது.

இதன் காரணமாக இந்த வங்கியின் இந்நிறுவனப் பங்குகளைக் வைத்திருப்பவர்கள் கிடைத்த வரை லாபம் என்று கருதி விற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரக் காலமாக இந்த வங்கியின் கணக்குகள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதால் இதன் மதிப்பு சுமார் 53 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டிபிஎஸ் வங்கியுடன் லட்சுமி விலாஸ் வங்கியை இணைக்க ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்து அது குறித்த இறுதி முடிவை இன்னும் எடுக்கப்படாத நிலையில் லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு எவ்விதமான லாபமோ நன்மையோ இல்லை என்ற நிலையும் பங்குகள் சரிவிற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. லட்சுமி விலாஸ் வங்கியின் ஒரு பங்கு கடந்த செவ்வாய்க்கிழமை 15.55 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது வெறும் 7.30 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் இந்த வங்கிக்கு என்னென்ன சிக்கல்கள் வரப்போகிறதோ தெரியவில்லை.

More News >>