கொரோனா பாதிக்கப்பட்ட அகமது படேல் மரணம்.. மோடி, ராகுல்காந்தி இரங்கல்

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அகமது படேல், காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவர். கடந்த அக்டோபர் 1-ம் தேதியன்று அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனாவில் இருந்து அவர் குணம் அடைந்தாலும், பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததால் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரான அகமது படேல் மறைவு, அக்கட்சியினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களில் கட்சியினருக்கு இடையே மோதல்கள் ஏற்படும் போதும், கட்சியில் பிரச்சனைகள் ஏற்படும் போதும் அவற்றை சரியாகத் தீர்ப்பதில் மிகவும் கைதேர்ந்தவராக இருந்தார். கட்சியின் தலைமைக்கு எப்போதுமே விசுவாசமாக இருந்தவர். குஜராத் பாரூச் தொகுதியில் 3 முறை வென்று மக்களவை உறுப்பினராகவும், 5 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். கடைசியாக, மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இன்று மிகவும் துயரமான நாள். காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கியவர் அகமது படேல், பல்வேறு சோதனையான காலங்களில் கட்சிக்காக மிகவும் அரும்பாடுபட்டவர். கட்சிக்கு மிகப்பெரிய சொத்தாக இருந்தார். அவரது மகன் பைசல் அகமது மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அகமது படேல் கட்சியின் மூத்த தலைவர். அனுபவம் மிக்க அவர் எனக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கக் கூடிய நண்பராக இருந்தார். அவரது மறைவு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அகமது படேல் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். மக்களுக்குச் சேவையாற்றுவதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதில் அவரது பங்கு நினைவு கூறத்தக்கது. அவரது மகனிடம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>