நான்கு ஆண்டுகளில் அதிகப்பட்ச விலையை தொட்டது பெட்ரோல், டீசல்!
பெட்ரோல், டீசல் விலை, கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான உயர்வை அடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரத்திற்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றம் பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வந்தன. ஆனால், பாஜக அரசனாது, கடந்த 2017, ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது.
நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யப்பட்டதற்குப் பின்னர் பெட்ரோல், டீசலின் விலை அதிகரித்துக் கொண்டுதான் வருகிறதே தவிர குறையவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை கடும் சிரமத்திற்கு ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில் திங்கட்கிழமையன்று திடீரென டீசல், பெட்ரோல் விலை 18 காசுகள் உயர்ந்தது. தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 73 ரூபாய் 73 காசுகளுக்கு உயர்ந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டு, செப்டம்பர் 14-ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் 06 காசுகளாக இருந்தது. அந்த வகையில் தற்போதுதான் பெட்ரோல் விலையானது மீண்டும் அதிகபட்ச விலை உயர்வை எட்டியுள்ளது.
டீசலைப் பொறுத்தவரை, இதற்கு முன்பு ஒரு லிட்டர் 64 ரூபாய் .22 காசுகள் இருந்த நிலையில், திங்களன்று 64 ரூபாய் 58 காசுகளாக உயர்ந்தது. இதுவும் தில்லியை பொறுத்தவரையில் முன்னெப்போதும் இல்லாத உயர்வாகும்.
சென்னையில் திங்களன்று ஒரு லிட்டர் டீசல் 68 ரூபாய் 12 காசுகளாகவும், பெட்ரோல் ஒரு லிட்டர் 76 ரூபாய் 48 காசுகளாகவும் விற்பனையானது.எண்ணெய் நிறுவனங்களின் தேவை மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாகவே விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com