செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. 1000 கன அடி நீர் வெளியேற்றம்.. முகாம்களில் மக்கள் தங்கவைப்பு..

சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.25) பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டது. இதையடுத்து, அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் உள்ள மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது தற்போது கடலூருக்குக் கிழக்கு தென்கிழக்கே 300 கி.மீ. தொலைவிலும், சென்னைக்குத் தென்கிழக்கே 370 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டில் இந்த ஏரி திடீரென திறக்கப்பட்டதால், ஏராளமான பகுதிகள் நீரில் மூழ்கின. சென்னை மிகவும் மோசமான சூழலைச் சந்தித்தது. அதனால், மக்கள் இம்முறையும் ஏரி திறக்கப்பட்டால் என்னவாகுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் வெள்ள கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.பாபு, சென்னை மாநகராட்சி, காவல் துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்களுக்கு ஏரி திறப்பு குறித்து கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.தற்போது, வடகிழக்குப் பருவமழையினாலும், கிருஷ்ணா நீர் வரத்தினாலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து உள்ளபடியால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் 22 அடியாக உயரும்போது, அணையின் வெள்ள உபரிநீர் வெளியேற்றப்பட வேண்டும். தற்போது நீர்மட்டம் 22 அடியை எட்டியுள்ளதால், ஏரியிலிருந்து உபரிநீர் பகல் 12 மணிக்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படும். நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார்.

இதன்படி, இன்று பகல் 12 மணியளவில் ஏரி திறக்கப்பட்டு, வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், ஏரிக்கு 7 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து உள்ளது. எனவே, நீர்வரத்துக்கு ஏற்பட வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட உள்ளது.இதையடுத்து, வெள்ள நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் சென்னைக்குள் செல்லும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம், கானு நகர், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் மாநகராட்சி நிவாரண மையங்களுக்கு அனுப்பப்பட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டால், சென்னை மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிக்க மாநகராட்சி, ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 044-25384530, 044-25384540 மற்றும் தொலைப்பேசி எண் 1913ல் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

More News >>