ஸ்கீம்க்கு புது விளக்கம் அளித்த தலைமை நீதிபதி! - காவிரி விவகாரத்தில் இழுபறி
ஸ்கீம் என்பது செயல் திட்டத்தைக் குறிப்பதே தவிர காவிரி மேலாண்மை வாரியத்தை அல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அதிர்ச்சி அளித்துள்ளார்.
எனினும், இப்பிரச்சனையில், தமிழ கத்தின் கவலையை உச்ச நீதிமன்றம் புரிந்து கொண்டிருப்பதாகவும், தமிழ் நாட்டுக்கு உரிய தண்ணீர் கிடைப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடுதொடர்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை 6 வாரமாகியும் மத்திய அரசு அமல்படுத்தவில்லை. மாறாக, காலக்கெடுவின் கடைசி நாளில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இருக்கும் ‘ஸ்கீம்’ என்று குறிப்பிடு வது மேலாண்மை வாரியம்தானா? என்பதில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக மத்திய பாஜக அரசு தெரிவித்தது.
எனினும், 6 வாரக் கெடுவுக்குள், காவிரி நதிநீர் பங்கீட்டுக்கு எந்த ஏற்பாட்டையும் செய்யாத மத்திய அரசு, தற்போது, தீர்ப்பு தொடர்பாக விளக்கம்கேட்டு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது.
மறுபுறத்தில், தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. தங்களின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசின் வழக்கறிஞர் உமாபதி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு திங்களன்று முறையிட்டார். அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்ற வார்த்தை, காவிரி மேலாண்மை வாரியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.
அதற்கு “நாங்கள் (தமிழ்நாடு அரசு) அவ்வாறுதான் கருதுகிறோம்” என்று வழக்கறிஞர் உமாபதி தெரிவித்தார். அப்போது, தலைமை நீதிபதியோ ‘‘ஸ்கீம்’ என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியத்தை குறிப்பிடுவது அல்ல; ஒரு செயல்திட்டம் என்ற பொருளிலேயே அதனைக் குறிப்பிட்டோம்” என்று தெரிவித்தார்.
மேலும், “தமிழ்நாட்டின் தண்ணீர் தேவைக்கு தீர்வு காணும் வகையில் நாங்கள் தீர்ப்பு வழங்கினோம்; இந்த பிரச்சனையின் தீவிரத்தை நாங்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறோம்; தமிழக நலனை நாங்கள் கவனத்தில் கொள்வோம். தமிழகத்துக்கு போதிய தண்ணீர் கிடைப்பதை உச்சநீதிமன்றம் உறுதிசெய்யும்” என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com