கொட்டும் மழையில் மக்களை சந்தித்து அரிசி கொடுத்த ஸ்டாலின்..
சென்னையில் கொட்டும் மழையில் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.புயல் காரணமாகச் சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புவதால், ஏரி திறக்கப்பட்டுள்ளது. இதனால், குன்றத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம், கானு நகர், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் மாநகராட்சி நிவாரண மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
சென்னையில் இரண்டாவது நாளாகத் தொடரும் கனமழையால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காலை முதல் மழை விட்டு விட்டு கொட்டி வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மழையிலும் மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார். பெரம்பூர், சூளை, திரு.வி.க.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை அவர் சந்தித்தார். மழைகோட்டு அணிந்த ஸ்டாலின், முழங்கால் அளவு மழை நீருக்குள் நடந்தே சென்றார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அவரிடம் மாநகராட்சியினர் தங்களைக் கண்டுகொள்ளவில்லை என்று குறைபட்டனர். மேலும், அடைப்புகளை வெளியேற்றுவதில் மாநகராட்சி மந்தமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினர்.
அவர்களுக்கு அரிசி உள்பட நிவாரணப் பொருட்களை ஸ்டாலின் வழங்கினார்.ஸ்டாலினுடன் திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சேகர்பாபு, ரவிச்சந்திரன், தாயகம் கவி ஆகியோரும் உடன் சென்றனர். வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஸ்டாலினிடம் அவர்கள் விளக்கினர். ஸ்டாலின் முகக்கவசம், மழைகோட்டு அணிந்து கொட்டும் மழையில் மக்களை சந்திக்க வந்ததற்குப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.