தமிழக தீயணைப்பு துறையின் தீ செயலி!
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சேவைகளை பொது மக்கள் எளிதில் பெறவும், தீ, விபத்து, வெள்ளம், ஆழ்துளைக் கிணறு விபத்து, வனவிலங்கு மீட்பு, ரசாயனம் மற்றும் விஷவாயுக் கசிவு உள்ளிட்ட அவசர உதவிகளுக்கு இத்துறையை மக்கள் எளிதில் அணுகிடவும், நவீன தொழில்நுட்ப உதவியுடன் நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையால் “தீ” எனும் அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஆம்டெக்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து உருவக்கப்பட்ட இந்த அலைபேசி செயலியின் மூலம், அவசர காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தீயணைப்பு துறையை அணுகுவதற்கும், அழைத்த 10 வினாடிக்குள் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, விபத்து மற்றும் உதவிகோரும் இடத்திற்கு மிக குறுகிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தகுந்த உபகரணங்களோடு சென்று உதவுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக “தீ” செயலியுடன் கூடிய 371 மடிகணினிகள் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் மற்றும் சென்னையில் உள்ள தீக் கட்டுப்பாட்டு அறைக்கும் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று“தீ” செயலியுடன் கூடிய முதல் மடி கணிணியை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் எம்.எஸ் ஜாபர் சேட் அவர்களிடம் வழங்கினார்கள். “தீ” செயலியை மக்கள் தங்களது அலைபேசிகளில் இலவசமாக பதிவிறக்கம் செய்து, விபத்து அல்லது இடர்பாடுகள் ஏற்படும் போது உடன் தகவல் தருவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.