மலையாள சினிமா ஜல்லிக்கட்டு ஆஸ்கார் விருதுக்கு போகிறது
பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்கத்தில் வெளியான மலையாள சினிமா 'ஜல்லிக்கட்டு' ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மலையாள சினிமா வரலாற்றில் இது ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்படும் மூன்றாவது படமாகும்.மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் பிரபல நடிகர் பிரித்விராஜின் அண்ணன் இந்திரஜித்தை நாயகனாக வைத்து 'நாயகன்' என்ற படத்தை முதன்முதலாக இயக்கினார். இதன் பின்னர் சிட்டி ஆப் காட், ஆமென், டபுள் பேரல், அங்கமாலி டைரீஸ், இ ம யவ் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வருடம் இவர் ஜல்லிக்கட்டு என்ற படத்தை இயக்கினார். ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சாபு மோன் உள்பட பலர் நடித்த இந்த படம் பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. கடந்த வருடம் திருவனந்தபுரத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படத்தை இயக்கிய லிஜோ ஜோசுக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைத்தது. இதேபோல இந்த ஆண்டின் ஆசிய சினிமா விருதுகளுக்கு சிறந்த இசை மற்றும் ஒளிப்பதிவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தவிர டொரன்டோ சர்வதேச திரைப்பட விழா, லண்டன் திரைப்பட விழா உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் கேரள அரசின் சினிமா விருதுகள் இந்தப் படத்திற்கு கிடைத்துள்ளன.
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படத்திற்கு விருது கிடைத்துள்ளது. கேரளாவில் உள்ள ஒரு மலை கிராமத்தில் இறைச்சிக்காக கொண்டுவரப்படும் ஒரு எருமை தப்பித்து ஓடுகிறது. அதை ஊர்மக்கள் சேர்ந்து விரட்டிப் பிடிப்பது தான் இந்த படத்தின் கதையாகும். இந்நிலையில் இந்தப் படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பட்டியலில் ஜல்லிக்கட்டு இடம்பிடித்துள்ளது. இதற்கு முன்பு இரண்டு படங்கள் மட்டும் தான் மலையாளத்திலிருந்து ஆஸ்காருக்கு சென்றுள்ளது. 1997ல் குரு என்ற படமும், 2011ல் ஆதாமின்டெ மகன் அபு என்ற படமும் ஆஸ்காருக்கு சென்றுள்ளது.