இனவெறி போராளி, நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா மரணம்
இனவெறிக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவில் கடுமையாகப் போராடியவரும், நெல்சன் மண்டேலாவின் முன்னாள் துணைவியருமான வின்னி மண்டேலா மரணமடைந்தார்.
1950களில் சந்தித்துக் கொண்ட இருவரும் 1958 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 38 ஆண்டுகள் துணைவர்களாக வாழ்ந்தனர். அதில் நெல்சன் மண்டேலா பெரும்பாலும் சிறைவாசத்தில் இருந்தார். சொல்லப் போனால், நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தபோது, அவர் சார்பாகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை இனவெறிக்கெதிராக வின்னி நடத்தி வந்தார்.
27 ஆண்டுகள் சிறைவாசத்தைக் கழித்து விட்டு நெல்சன் மண்டேலா வெளியில் வந்தபோது இருவரும் கைகோர்த்து வரும் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்திய ஒன்றாகும். சில ஆண்டுகளிலேயே வின்னி மண்டேலாவின் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தின.
அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் இருவரும் பிரிந்தனர். 1996 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டாலும், மண்டேலா என்று தன்னுடைய பெயரோடு இணைத்துக் கொண்டதை வின்னி கைவிட்டு விடவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே வின்னி மண்டேலா நோய்வாய்ப்பட்டிருந்தார். 1936 ஆம் ஆண்டு பிறந்த வின்னி தனது 81வது வயதில் மரணமடைந்துள்ளார். அவரது தனி உதவியாளர் இந்தச் செய்தியைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com