தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும் சிறையில் இருந்தும் நான் வெற்றி பெறுவேன் பாஜகவுக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி

பாஜக நமது நாட்டின் சாபம், தைரியம் இருந்தால் என்னை அவர்கள் கைது செய்யட்டும். சிறையில் இருந்தும் நான் வெற்றி பெறுவேன் என்று கொல்கத்தாவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.

மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தைக் கைப்பற்ற பாஜக மிகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அமித்ஷாவின் நேரடி கண்காணிப்பில் பாஜக மேற்கு வங்கத்தில் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை மம்தா பானர்ஜி இப்போதே தொடங்கி விட்டார். கொல்கத்தாவில் இன்று நடந்த சட்டசபை தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தை அவர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது பாஜகவை அவர் கடுமையாக தாக்கி பேசினார்.

பாஜக ஒரு அரசியல் கட்சியல்ல. இக்கட்சி பொய்களின் கூடாரமாகி விட்டது. தேர்தல் நெருங்கும் போதெல்லாம் நாரதா சாரதா எனக் கூறிக்கொண்டு திரிணாமுல் கட்சித் தலைவர்களை மிரட்டுவது தான் அவர்களது வேலையாகும். ஆனால் ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன், பாஜகவையோ, அவர்களது விசாரணை அமைப்புகளையோ நான் பயப்பட போவதில்லை. அவர்களுக்கு தைரியம் இருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும். நான் சிறையில் இருந்தபடியே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். அடுத்த தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் தான் கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். எங்கள் கட்சித் தலைவர்களை பணத்தை கொடுத்து தங்களது கட்சிக்கு இழுக்க திட்டமிடுகின்றனர். ஒரு எம்எல்ஏவுக்கு 2 கோடி விலை பேசுகின்றனர். இதனால் பாஜகவை எப்படி ஒரு அரசியல் கட்சி என அழைக்க முடியும். அவர்கள் இந்த நாட்டிற்கே அவமானம் ஆகும். பாஜக மேற்கு வங்காளத்தில் ஆட்சி அமைக்கும் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் அது கனவில் கூட நடக்காது. நாங்கள் தான் மீண்டும் அதிக தொகுதிகளைக் கைப்பற்றி அரியணையில் அமருவோம். பீகாரில் பாஜகவின் வெற்றி உண்மையான வெற்றி அல்ல. அது மக்கள் தீர்ப்பு அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

More News >>