நடிகை பலாத்கார வழக்கு விசாரணை நடத்துவதில் திடீர் சிக்கல்
அரசுத் தரப்பு வழக்கறிஞர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால் மலையாள நடிகை பலாத்கார வழக்கு விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்கும் வரை விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஹனி வர்கீஸ் என்ற பெண் நீதிபதி இந்த வழக்கை விசாரித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இந்த தனி நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் சாட்சிகளிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டு வாரங்களுக்கு விசாரணையை நிறுத்தி வைத்தது. பின்னர் இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாது என்றும், விசாரணை நீதிமன்றமும், அரசுத் தரப்பும் இணைந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தது. இதையடுத்து கடந்த 23ம் தேதி விசாரணை மீண்டும் தொடங்கியது.இந்நிலையில் அரசுத் தரப்பு சார்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் சுரேசன் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்தார். விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற அவருடைய கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாததாலும், தன்னைக் குறித்து வந்த மொட்டைக் கடிதத்தை விசாரணை நீதிமன்றம் வாசித்தது தொடர்பான புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததாலும் தான் இவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து விசாரணை மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. அரசுத் தரப்பு வழக்கறிஞரின் ராஜினாமாவை இதுவரை கேரள அரசு ஏற்கவில்லை. புதிய வழக்கறிஞரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால் நடிகை பலாத்கார வழக்கில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்கும் வரை விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு சார்பில் விசாரணை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.