திருப்பதி மலைப்பாதையில் திடீர் மண் சரிவு:
திருப்பதி திருமலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு பக்தர்கள் வந்த கார் மீது பாறை கற்கள் விழுந்தது.வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிவர் புயலாக மாறி இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இதன் தாக்கமாக நேற்று காலை முதலே திருப்பதி திருமலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டது ஐதராபாத்தைச் சேர்ந்த பக்தர்கள் காரில் வந்து கொண்டிருந்த போது கார் மீது பாறை கற்கள் விழுந்தது. டிரைவர் சாமர்த்தியமாகக் காரை நிறுத்தியதால் காரில் பயணித்த பக்தர்கள் எந்தவித காயமின்றி தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் அங்கு வந்து காரில் இருந்த பக்தர்களை மீட்டு பத்திரமாகத் திருமலைக்கு அழைத்து வந்தனர்.
மேலும் மலைப்பாதையில் சரிந்த பாறைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த வந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி தரிசனம் செய்து வருகின்றனர்.தொடர் மழையால் திருமலையில் உள்ள ஐந்து அணைகளும் முழுவதும் நிரம்பியதால் அணைகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.