புதுச்சேரியை புரட்டி போட்ட நிவர் புயல்.. மரங்கள் விழுந்தன..
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல், இன்று(நவ.26) அதிகாலையில் மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. அச்சமயம், புதுச்சேரியில் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இடைவிடாது மழையும் பெய்தது.
கனமழை காரணமாக, புதுச்சேரியில் புஸ்சி வீதி, இந்திராகாந்தி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளிலும், புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் நீரில் ஊர்ந்து செல்கின்றன. இதேபோல் பலத்த காற்றின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சாலைகளின் குறுக்கே கிடந்த மரங்களை அகற்றினர்.
முதல்வர் நாராயணசாமி, வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, புயல் பாதிப்பு நிலவரம் குறித்து விசாரித்தார். மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என்று உறுதியளித்தார்.