மத்திய அரசை கண்டித்து தொழிலாளர் சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் கேரளாவில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இன்று நடத்திவரும் 24 மணிநேர பொது வேலை நிறுத்தத்தால் கேரளாவில் மட்டும் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பஸ், ஆட்டோ, டாக்சிகள் உள்பட வாகனங்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டுள்ளன.

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோதப் போக்கை கண்டித்து இன்று 24 மணிநேர பொது வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய இந்த வேலை நிறுத்தம் இன்று நள்ளிரவு 12 மணி வரை நடைபெறுகிறது. பாஜகவின் பிஎம்எஸ் தவிர சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி உள்பட பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளன. தொழில் கோட் முறையை வாபஸ் பெற வேண்டும், வருமான வரி கட்டாத எல்லா குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் வழங்க வேண்டும், தேவைப்படும் அனைவருக்கும் 10 கிலோ ரேஷன் பொருள் இலவசமாக வழங்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. 10 தேசிய சங்கங்களும், வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கத்தினரும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர்.

இந்த பொது வேலை நிறுத்தம் இந்தியாவில் வேறு எங்கும் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் வழக்கம்போல கேரளாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், டாக்சி, ஆட்டோ உள்பட வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு உட்பட பெரும்பாலான பகுதிகளில் கடைகள், ஓட்டல்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் ஊழியர்கள் வருகை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ரயில், மெட்ரோ மற்றும் விமானப் போக்குவரத்து மட்டும் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது.

More News >>