சென்னையில் புயலால் விழுந்த 380 மரங்கள் அகற்றம்..3 பேர் பலி, 110 குடிசை இடிந்தது..
தமிழகத்தில் மழைக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். சாலையில் விழுந்த 380 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல், இன்று(நவ.26) அதிகாலை 2.30 மணியளவில் மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. அச்சமயம், சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இடைவிடாது மழையும் பெய்தது.
சென்னையில் நேற்று முதல் இன்று காலை வரை பெய்த தொடர் மழையால், தண்டையார்பேட்டை, வண்ணாரப் பேட்டை, மடிப்பாக்கம், வேளச்சேரி, எம்.ஜி.ஆர்.நகர் சூளைப்பள்ளம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கியது. பாரீஸ் கார்னர் சாலை உள்பட முக்கிய சாலைகளிலேயே மழைநீர் தேங்கியது.
ராஜா அண்ணாமலைபுரம், கே.கே.நகர் உள்பட பல பகுதிகளில் பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்தன. பேரிடர் மீட்பு படையினரும், மாநகராட்சி ஊழியர்களும் சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றி வருகின்றனர். சென்னை மற்றும் இதர பகுதிகளில் சுமார் 380 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன என்றும், 110 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன என்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். சென்னையில் மின்சாரம், தொலைத் தொடர்பு உள்பட அனைத்து சேவைகளும் மீண்டும் சரியாக இயக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மழை வெள்ளப் பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், சிலர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.