நிவர் புயலால் சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்த கொரோனா போராளியான டாக்டர்

நிவர் புயல் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கொரோனா போராளியான டாக்டர் சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்தார். இவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக போபாலில் இருந்து சென்னைக்கு நேற்று கொண்டுவர திட்டமிட்டிருந்தனர். ஆனால் நிவர் புயல் காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சிகிச்சை கிடைக்காமல் அவர் மரணமடைந்தார்.

நிவர் புயல் தமிழகத்தை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை, கடலூர், விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தரமணி, வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்பட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. நிவர் புயல் இன்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. கரையை கடந்த போது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் மணிக்கு 110 கிமீ முதல் 130 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. நிவர் சூறாவளியில் இதுவரை 5க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். புயல் கரையை கடந்த போதிலும் சென்னை, கடலூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை வரை பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு டாக்டர் உரிய சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் சுபம் உபாத்யாய் (26). டாக்டரான இவர், அங்குள்ள புந்தேல்கண்ட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி இவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கடந்த 10ம் தேதி சிராயு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த போது நுரையீரலில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது தெரிய வந்தது. உடனடியாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவரை சென்னைக்கு விமானத்தில் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிவர் புயல் காரணமாக நேற்று விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அவரை சென்னைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து சுபம் உபாத்யாய் பரிதாபமாக இறந்தார். சென்னைக்கு கொண்டு சில முடிந்திருந்தால் டாக்டர் சுபத்தின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று சிராயு மருத்துவமனை டாக்டர் அஜய் கோயங்கா தெரிவித்தார். டாக்டர் சுபம் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>