அமெரிக்காவுடன் ஜப்பான் கலந்தாலோசனை- வடகொரியா உடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் சிக்கலா?
ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, அமெரிக்காவுக்கு 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது அவர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்து வடகொரியா பற்றி பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடகொரியா – தென் கொரியா இடையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், மே மாத இறுதியில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் நேரில் சந்தித்து இரு நாட்டுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்னையை முடித்துக் கொள்வர் என்று ஆருடம் கூறப்பட்டது.
சூழல் இப்படி இருக்கையில், ஜப்பான் பிரதமர் அபே, திடீரென்று அமெரிக்கப் பயணம் மேற்கொள்கிறார். வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை அவர் அமெரிக்க சுற்றுப் பயணத்தில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அரசு முறை சுற்றுப் பயணத்தின் போது, ட்ரம்ப்பிடம் வடகொரியா, ஜப்பானுக்கு எந்தெந்த வகையில் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது குறித்து விளக்குவார் என்று தெரிகிறது.
குறிப்பாக, `வடகொரியா இடத்தில் எந்த வகையான ஏவுகணைகள் இருக்கிறது. இது கொரிய தீபகற்பத்துக்கும், ஆசிய கண்டத்துக்கும் எவ்விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்’ என்பது குறித்து அபே, ட்ரம்ப்பிடம் எடுத்துக் கூறுவார் என்று சொல்லப்படுகிறது. வடகொரியா, அணு ஆயுதங்களை கைவிட முன்வந்திருக்கும் இந்த சூழலில், ஜப்பான் பிரதமரின் அமெரிக்கப் பயணம் உலக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com