29ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை!- வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல், இன்று(நவ.26) அதிகாலையில் மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. அச்சமயம், புதுச்சேரியில் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இடைவிடாது மழையும் பெய்தது. இரண்டு நாட்களாகத் தமிழகத்தை மிரட்டி வந்த நிவர் புயல் இன்று அதிகாலை கரையைக் கடந்தது. இந்த புயலைத் தொடர்ந்து பெய்த பலத்த தொடர் மழை தான் மக்களைப் பாதிப்புக்கு உள்ளாகியது.நிவர் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் சென்னையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. சென்னையில் ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழுந்துள்ளன.

தற்போது நிவர் புயல் வடமேற்குத் திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து ஆந்திராவில் மையம் கொண்டுள்ளது. இதனால் திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழைபெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்தது. அதன்படி தற்போது சென்னையின் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, நிவர் புயல் ஓய்ந்துள்ள நிலையில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 29ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது புதிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News >>