சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்!
இந்தத் திட்டத்தின் மூலம் பெண் குழந்தை பிறந்தால், அக்குழந்தை பெயரில் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். இத்திட்டத்துக்கு பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.பெண் குழந்தை 1-08-2011க்கு முன்பு பிறந்த குழந்தையாக இருந்தால் 25,000 ரூபாய் வழங்கப்படும்.
உங்கள் பெண் குழந்தை 1-8-2011க்கு பிறகு பிறந்தக் குழந்தையாக இருப்பின் 50,000ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் 1-8-2011 அன்றோ அதற்கு பிறகோ பெண் குழந்தை பிறந்திருக்க வேண்டும். குடும்பத்திற்கு ஒரே பெண் குழந்தையாக இருந்தால், அக்குழந்தையின் நிலையான வைப்புத் தொகையான 50,000 ரூபாய் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, அக்குழந்தையின் பெயரில் ரசீது வழங்கப்படுகிறது.
இந்த வைப்புத்தொகை ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் புதுப்பிக்கப்பட்டு, 18 வருடங்கள் நிறைவடைந்ததும், அப்போதைய வட்டி விகிதத்துடனும், கல்வி ஊக்கத்தொகையுடனும் கூடிய முதிர்வு தொகை, அக்குழந்தைக்கு மேம்பாட்டு நிறுவனத்தினால் காசோலையாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள், அரசு மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும்.
பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
ஆண்டு வருமானம் ரூ. 72,000க்குள் இருக்க வேண்டும்.
இரண்டாவது குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இத்திட்டத்தின் மூலம் பலன் பெற்றவர்கள் பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளக் கூடாது.
இதற்கான விண்ணப்பம் ஒவ்வொரு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கிடைக்கிறது. அவ்வாறு இல்லையென்றால் http://cms.tn.gov.in/sites/def/ault/files/forms/socialwelfareschemes.pdf என்ற இணைய தள முகவரிக்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம். பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவற்றில் குறிப்பிட்டுள்ள உறுதிமொழி சான்றிதழ்களை இணைத்து மாவட்ட சமூக அலுவலரிடம் கொடுக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் பயன்பெற மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர்கள் ( ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் ), குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், விரிவாக்க அலுவலர்கள்( சமூக நலம் ), ஊர் நல அலுவலர்களை அனுகவேண்டும்.