சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

சபரிமலையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.

கொரோனா பரவல் காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மண்டல காலத்தில் கடந்த வருடம் வரை லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்த நிலையில் இந்த வருடம் திங்கள் முதல் வெள்ளி வரை 1,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டும் 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்களின் வருகை குறைந்ததை தொடர்ந்து சபரிமலையில் வருமானம் கடுமையாக குறைந்துள்ளது. வழக்கமாக மண்டல காலத்தில் தினமும் சராசரியாக மூன்றரை கோடிக்கும் அதிகமாக வருமானம் கிடைக்கும். ஆனால் தற்போது தினமும் 10 லட்சத்திற்கும் குறைவாகவே வருமானம் கிடைத்து வருகிறது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதையடுத்து பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது தினசரி 1,000 பக்தர்களுக்கு அனுமதி உள்ள போதிலும் அதை விட குறைவாகவே பக்தர்கள் வருகின்றனர். எனவே தினசரி பக்தர்கள் எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், பக்தர்கள் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார்.இந்நிலையில் கேரள அரசு தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் இன்று திருவனந்தபுரத்தில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தேவசம் போர்டு, சுகாதாரத் துறை, காவல்துறை, பொதுப்பணித் துறை உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் எத்தனை பக்தர்களை அனுமதிப்பது என்று முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அரசிடம் பரிந்துரைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. விரைவில் இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. அந்த கூட்டத்தில் தான் எத்தனை பக்தர்களை அனுமதிப்பது என்பது முடிவு செய்யப்படும்.

More News >>