கொரோனாவால் இவர்களுக்கும் அவதி.. மகாராஷ்டிராவில் பாலியல் தொழிலாளிகளுக்கு மாதம் 5,000 நிதியுதவி

கொரோனாவால் வருமானம் இன்றி அவதிப்படும் பாலியல் தொழிலாளிகளுக்கு மாதம் 5,000 ரூபாய் நிவாரண உதவி அளிக்க மகாராஷ்டிரா அரசு தீர்மானித்துள்ளது. இந்தியாவிலேயே பாலியல் தொழிலாளிகளுக்கு நிவாரண உதவி அளிக்கும் முதல் மாநிலம் மகாராஷ்டிரா தான் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக உலகில் பெரும்பாலான நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தும், வருமானம் இருந்தும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. பல நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த காரணங்களால் பல மாநில அரசுகள் வருமானம் இன்றி தவித்து வரும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி அளித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா காலத்தில் வருமானம் இன்றி அவதிப்படும் பாலியல் தொழிலாளிகளுக்கு நிவாரண உதவி அளிக்க மகாராஷ்டிரா அரசு தீர்மானித்துள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் தான் கொரோனா மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த மாநிலத்தில் தான் தினசரி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. நேற்று 6,406 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. மரண எண்ணிக்கையும் இங்கு தான் அதிகமாகும். இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தற்போது மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா காரணமாக வருமானம் இன்றி தவித்து வரும் பாலியல் தொழிலாளிகளுக்கு உதவ மகாராஷ்டிர அரசு முன்வந்துள்ளது. இதன்படி மாதந்தோறும் 5,000 ரூபாய் நிவாரண உதவி அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் உள்ளவர்களுக்கு கூடுதலாக 2,500 ரூபாய் வழங்கப்படும். இந்தியாவிலேயே மகராஷ்டிரா மாநிலத்தில் தான் பாலியல் தொழிலாளிகள் அதிகமாக உள்ளனர். இந்த மாநிலத்தில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் இந்த உதவி கிடைக்கும். இதற்காக அரசுக்கு 50 கோடி கூடுதல் செலவாகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள மூன்று மாதத்திற்கு முதல் கட்டமாக இந்த நிவாரண உதவி வழங்கப்படும். இதற்கான உத்தரவை மகாராஷ்டிரா அரசு பிறப்பித்துள்ளது.

More News >>