பிரார்த்தனை, மந்திரங்களால் எந்த பயனும் கிடையாது.. எந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வதில்லை.. கூறுவது யார் தெரியுமா?

பிரார்த்தனை, மந்திரங்களால் எந்த பயனும் கிடையாது. நான் கடந்த 5 வருடங்களாக கோவில், சர்ச் உட்பட எந்த வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வதில்லை என்று கூறுகிறார். பிரபல நடிகரும், பாடகருமான விஜய் யேசுதாஸ். பழம்பெரும் சினிமா பாடகரும், கர்நாடக இசைக் கலைஞருமான கே.ஜே. யேசுதாசின் மகன் விஜய் யேசுதாஸ். இவரும் ஒரு சிறந்த பாடகர் ஆவார். கடந்த 2000ல் மில்லேனியம் ஸ்டார் என்ற மலையாள படத்தில் பாடத்தொடங்கிய இவர், பின்னர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்பட ஏராளமான மொழிகளில் பாடியுள்ளார். யேசுதாஸ் அனைத்து மதத்திலும் தீவிர பக்தி கொண்டவர். இவர் பிறப்பால் கிறிஸ்தவர் என்றாலும் சபரிமலை ஐயப்பன் மற்றும் மூகாம்பிகை தேவியின் தீவிர பக்தர் ஆவார். யேசுதாஸ் தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு கண்டிப்பாக சென்று விடுவார்.

அங்கு குடும்பத்துடன் தரிசனம் செய்து விட்டு பின்னர் கர்நாடக இசை கச்சேரி நடத்துவது வழக்கம். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இவர் தன்னுடைய பிறந்த நாளின் போது இவ்வாறு மூகாம்பிகா கோவிலுக்கு சென்று கச்சேரி நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இதேபோல சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி சென்று தரிசனம் செய்வதும் உண்டு. ஆனால் ஏசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ், தனக்கு இப்போது கடவுள் நம்பிக்கை போய்விட்டது என்று கூறுகிறார். ஒரு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது: என்னுடைய அப்பாவின் தெய்வ நம்பிக்கை குறித்து அனைவருக்கும் தெரியும். எல்லா பிறந்தநாளிலும் அவர் கொல்லூர் மூகாம்பிகா தேவி சன்னதியில் இருப்பார். சபரிமலை ஐயப்பனை பாடி உணர்த்துவதும், உறங்க வைப்பதும் அவர் தான்.

கச்சேரி நடத்துவதற்கு முன்பாக அவர் விரதம் இருப்பதும் உண்டு. எல்லா தெய்வங்களுக்கும் நாம் உரிய மரியாதை செலுத்த வேண்டும் என்று தான் எனது அப்பாவும், அம்மாவும் எனக்கு சொல்லித் தந்தனர். என்னுடைய வீட்டில் பூஜை அறை இருந்தது. சிறுவயதில் நானும் தினமும் பூஜை செய்வது வழக்கம். ஆனால் இப்போது அதெல்லாம் ஒரு கற்பனை என்று தோன்றுகிறது. கடந்த 5 வருடங்களாக நான் கோவிலுக்கோ, சர்ச்சுக்கோ செல்வதில்லை. பிரார்த்தனையாலும், மந்திரத்தாலும் ஒரு பயனும் இல்லை என்பது தான் என்னுடைய கருத்து. உதாரணமாக நம்முடைய ஒரு தங்க செயின் காணாமல் போய்விட்டது என கருதுவோம். அது கிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்வோம்.

ஆனால் பின்னர் எங்காவது ஓரிடத்தில் இருந்து அந்த செயின் கிடைக்கும். அந்த செயின் வைத்த இடத்தில் தான் இருந்தது. நாம் பிரார்த்தனை செய்ததால் தெய்வம் செயினை அங்கு கொண்டு வைக்கவில்லை. அதை நாம் உணர வேண்டும். நமக்கு நிறைய பணம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதில் ஏதாவது அர்த்தம் உண்டா? பாசிட்டிவ், நெகட்டிவ் சக்திகள் உண்டு என்று நான் நம்புகிறேன். நம்மை எப்போதும் பாசிட்டிவாக வைத்திருக்க வேண்டும். அதுதான் தெய்வம் என நான் கருதுகிறேன். நம்முடைய பிரச்சனைகளை நாம் தான் தீர்க்க வேண்டும். இவர் அவர் கூறினார்.

More News >>