கொரோனா அச்சம் சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது திடீர் நிறுத்தம்

கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது நேற்று முதல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. சபரிமலை கோவில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பக்தர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக சபரிமலையில் இந்த வருடம் மண்டல சீசனில் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தரிசனத்திற்கு செல்லும் போது 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் கொண்டு செல்ல வேண்டும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட வெகு தொலைவில் இருந்து செல்லும் பக்தர்களுக்கு 26 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை நடத்தி விட்டு வர முடியாது என்பதால் அவர்களின் வசதிக்காக கொரோனா பரிசோதனை நடத்துவதற்காக சபரிமலையில் பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான பக்தர்கள் இங்கு தான் கொரோனா பரிசோதனை நடத்தி விட்டு தரிசனத்திற்கு செல்கின்றனர். சபரிமலையில் பரிசோதனை நடத்துபவர்களில் தினமும் 1000 பேரில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் உடனடியாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர பம்பை, சன்னிதானம் உட்பட பகுதிகளில் பணியில் உள்ள தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் போலீசார் சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சபரிமலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சபரிமலையில் பக்தர்களுக்கு கோவிலில் இருந்து இலையில் பிரசாதம் வழங்கப்படுவது உண்டு.

மேல்சாந்தி, தந்திரி அல்லது பூசாரிகள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவார்கள். அதில் திருநீறு, சந்தனம், பூ ஆகியவை இருக்கும். இதேபோல படிபூஜை, கணபதி ஹோமம் போன்ற சிறப்பு பூஜை நடத்தும் பக்தர்களுக்கும் இலையில் பிரசாதம் வழங்கப்படுவது உண்டு. இவர்களுக்கு தந்திரி உள்பட முக்கிய பூசாரிகள் தான் பிரசாதம் வழங்கி வந்தனர். இந்நிலையில் பக்தர்களுக்கு நேரடியாக பிரசாதம் வழங்கும் போது கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக கூறி நேற்று முதல் பிரசாதம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. தந்திரி, மேல்சாந்தி மற்றும் பூசாரிகள் கையிலிருந்து பிரசாதம் பெறுவதை பக்தர்கள் பெரிதும் விரும்புவார்கள். அதை ஒரு புண்ணியமாகவும் கருதுகின்றனர். இந்நிலையில் பிரசாதம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

More News >>