உ.பி. மருத்துவமனையில் சிறுமி சடலத்தை கடித்து இழுக்கும் நாய்.. வைரலாகும் வீடியோ..
உத்தரப்பிரதேசத்தில் சிறுமி சடலத்தை தெரு நாய் கடித்து இழுக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. நாட்டிலேயே நல்லாட்சியில் முதலிடம் என்று பாஜகவினர் பெருமை கொள்வது இந்த மாநிலத்தைத்தான். ஆனால், அந்த மாநிலத்தில் தான் சிறுமி பலாத்காரம், சாமியாரின் காமக்கொடூரங்கள், அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இல்லாமல் சிசுக்கள் மரணம் என்று பல்வேறு கொடூரமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி, சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது அரசு மருத்துவமனைக்குள் ஒரு தெரு நாய் நுழைந்து, சடலத்தை கவ்வி இழுக்கும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் இந்த கொடூரம் நடைபெற்றுள்ளது. மருத்துவமனையில் ஒரு ஸ்ட்ரெச்சரில் சிறுமி ஒருத்தியின் சடலம் வெள்ளை துணியால் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த சடலத்தை நாய் கடித்து இழுக்கும் சில வினாடிகள் அடங்கிய வீடியோ, சமூக ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக, அந்த சிறுமியின் குடும்பத்தினர் கூறுகையில், சிறுமியின் சடலத்தை ஆம்புலன்சுக்கு கொண்டு வராமல் ஒரே இடத்தில் ஒன்றரை மணி நேரம் வைத்து விட்டு, ஊழியர்கள் போய் விட்டார்கள்.
அந்த சமயத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்றனர். மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறுகையில், இந்த மருத்துவமனைக்குள் அடிக்கடி தெரு நாய்கள் நுழைந்து விடும். ஊழியர்களின் அலட்சியத்தால்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்றார். சிறுமியின் குடும்பத்தினர் லஞ்சம் தர முடியாமல் இருந்திருப்பார்கள். அதனால்தான் ஊழியர்கள், சடலத்தை பாதியில் விட்டு விட்டு போயிருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.