மோட்டார் உரிமையாளர், மாற்று நபரையும் சேர்க்க வேண்டும்... மத்திய அரசின் புதிய சட்ட திருத்தம்!
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கடந்தாண்டு செப்டம்பரில் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. புதிய மசோதாவில் 60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 20 புதியபிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சாலைப் போக்குவரத்து விதிமுறைகளைப் புதுப்பித்தல், சாலை பாதுகாப்பை பராமரித்தல், ஊழலை ஒழித்தல், சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல் ஆகியவற்றுக்காக இந்த சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. மேலும் இந்த திருத்தத்தில் விதிமுறைகளை மீறுவோர்க்கான அபராதங்கள் உயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் முதல் முறையாக இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். அடுத்த முறை ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.
இந்தக் குற்றங்களும் அபராதங்களும் டிஜிட்டல் முறையில் ஓட்டுநரைப் பற்றிய விவரங்களில் சேர்க்கப்படுவதால் அவரால் எதையும் இனி மறைக்க முடியாது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாக ஓட்டினால் டூ வீலர் டிரைவர்கள் ரூ.1,000, நடுத்தர ரக வாகன ஓட்டுநர்கள் ரூ.2,000, கனரக வாகன ஓட்டுநர்கள் ரூ.4,000 அபராதம் செலுத்த வேண்டும். ஹெல்மெட் அணியாமலும் சீட் பெல்ட் போடாமலும் சென்றால் இப்போது ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இது இனி ரூ.1,000 ஆக வசூலிக்கப்படும். வேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.1000 முதல் ரூ.2,000 வரை அபராதம், போக்குவரத்து விதிகளை மீறுவது, உரிமம் இல்லாமலோ, ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலோ ஓட்டுவது, ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் ஓட்டுவது, மது போதையில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக அபராதத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோட்டார் வாகனம் வாங்கும்போது உரிமையாளர் பெயரோடு, மாற்று நபரின் பெயரையும் பதிவு செய்து கொள்ள வழிவகை செய்கிறது இந்த சட்ட திருத்தம். இந்த திருத்தின் மூலம் வாகன பதிவின் போது உரிமையாளர் மற்றும் மாற்று நபரின் பெயரையும் சேர்ப்பதால், உரிமையாளர் இறக்க நேர்ந்தால் வாகனத்தின் பதிவு விவரங்கள் மாற்று நபராக தானாகவே மாறிவிடும். மேலும் காப்பீடு தொகைகளை பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதில் இந்த முறை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.