நான்கரை மாதத்தில் 22 கொரோனா பரிசோதனை.. பிசிசிஐ தலைவர் கங்குலி வேதனை

கடந்த நான்கரை மாதத்தில் 22 முறை நான் கொரோனா பரிசோதனை நடத்தி விட்டேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி கூறினார். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மும்பையில் இன்று நிருபர்களிடம் கூறியது: கடந்த நான்கரை மாதத்தில் நான் 22 முறை கொரோனா பரிசோதனை நடத்தி விட்டேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக இதுவரை எனக்கு பாசிட்டிவ் ஆகவில்லை. என்னை சுற்றிலும் நோய் பாதித்தவர்கள் இருந்தனர். அதனால் தான் வேறு வழியில்லாமல் பலமுறை பரிசோதனை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. என்னுடன் வயதான பெற்றோரும் வசித்து வருவதால் மிக கவனமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக துபாய்க்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அங்கு செல்வதற்கு முதலில் எனக்கு தயக்கமாகத் தான் இருந்தது. என்னைக் குறித்து மட்டுமல்ல, பலரும் என்னை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர். என் அருகில் எப்போதும் பலர் இருப்பார்கள். எனவே என்னிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் முழு உடல் தகுதியுடன் உள்ளனர். தற்போது ஆஸ்திரேலிய எல்லை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அங்கு நோயாளிகள் எண்ணிக்கை குறைவாகும். எனவே ஆஸ்திரேலியாவுக்கு தற்போது செல்வது மிகவும் சிரமமான காரியமாகும். அங்கு சென்றால் 14 நாட்கள் சுய தனிமையில் இருக்க வேண்டும். கொரோனா கொள்ளை நோய் பரவலுக்கு இடையே கூட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்த முடிந்தது ஒரு சாதனையாகும். இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை அதற்காக நான் பாராட்டுகிறேன்.

அடுத்த ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. விரைவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவில் விளையாடுவதற்காக வர உள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான போட்டியை நடத்துவது எளிதான விஷயம் தான். ஏனென்றால் ஆட்கள் குறைவாகவே இருப்பார்கள். ஆனால் அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது போட்டி நடதத்துவதற்கு சிரமம் ஏற்படும். கொரோனாவின் இரண்டாவது அலை வீசும் என்று கூறப்படுகிறது. டெல்லியிலும், மும்பையிலும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே நாம் மிகுந்த கவனமாகவே அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>