வறுமையின் காரணமாக குழந்தையை விற்ற காதல் தம்பதியர்
குழந்தையை வளர்க்க இயலாத வறுமையின் காரணமாக விற்பனை செய்த தாய் உள்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். குழந்தையின் தந்தையை தேடி வருகின்றனர். இது குறித்து கூறப்படுவதாவது: திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 31), கவிதா (வயது 22). இருவரும் காதலித்துள்ளனர். இருவர் வீட்டிலும் காதலை எதிர்த்ததால் குடும்பத்தை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அன்றாட செலவுகளுக்குக் கூட சம்பாதிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில் கவிதாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தாங்களே வறுமையில் வாடும் நிலையில் குழந்தையை எப்படி வளர்த்து ஆளாக்குவது என்ற பயம் முருகனை பிடித்துள்ளது. ஆகவே, குழந்தையை விற்று விடலாம் என்று தன் மனைவி கவிதாவிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்துள்ளார். அதன்படி திருப்பூரி, கீரனூரை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 40), விஜி (வயது 34) என்பவர்களுக்கு 10,000 ரூபாய்க்கு குழந்தையை முருகன் விற்றுள்ளார். தகவல் அறிந்த போலீஸார், குழந்தையின் தாயாகிய கவிதாவையும், வாங்கிய விஸ்வநாதன் மற்றும் விஜி இருவரையும் கைது செய்துள்ளனர். குழந்தையின் தந்தையாகிய முருகனை போலீஸார் தேடி வருகின்றனர்.