ஆஸ்திரேலியாவுடன் முதல் ஒருநாள் போட்டி.. மோசமான சாதனை படைத்த சுழற்பந்து வீச்சாளர் சாஹல்
ஆஸ்திரேலிய அணியுடன் இன்று நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 10 ஓவர்களில் 89 ரன்கள் விட்டுக் கொடுத்து தன்னுடைய சாதனையை தானே முறியடித்தார். கொரோனா பரவலுக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணி இன்று ஆஸ்திரேலியாவுடன் முதல் சர்வதேச போட்டியில் விளையாடியது. ஐபிஎல் போட்டி முடிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் அணி நேராக ஆஸ்திரேலியா சென்றது. இங்கு 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் தலா 3 டி20, ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. ஆஸ்திரேலியா டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் பிஞ்சும், வார்னரும் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 156 ரன்கள் குவித்தனர். இருவரும் சேர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களை விரட்டி விரட்டி அடித்தனர். 69 ரன்களில் வார்னர் ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் தன் பங்குக்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 66 பந்துகளில் 105 ரன்கள் குவித்தார். பிஞ்சும் தன் பங்குக்கு சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தார். இவர்களது அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 374 ரன்கள் குவித்தது. இந்திய பந்து வீச்சாளர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய வீரர்களிடம் பலத்த அடி வாங்கினர்.
சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி ஆகியோர் 10 ஓவர்களில் 80 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். இதில் சாஹல் ஒரு மோசமான சாதனையை இன்று படைத்தார். இதுவரை ஒருநாள் போட்டியில் ஒரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் 10 ஓவர்களில் அதிகமாக விட்டுக்கொடுத்த ரன்கள் 88 ஆகும். அந்த சாதனையை சாஹல் தான் படைத்தார். அவரது அந்த சாதனையை இன்று அவரே முறியடித்தார். இன்றைய போட்டியில் 10 ஓவர்கள் வீசி சாஹல் 89 ரன்கள் விட்டுக் கொடுத்தார். போட்டியில் அவருக்கு ஒரே ஒரு விக்கெட் மட்டும் தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்ஸ் ஸ்டோய்னிசை அவர் முதல் பந்திலேயே ஆட்டமிழக்க வைத்தார்.