`அதானிக்கு கடன் கொடுக்காதீர்கள்... இந்தியா - ஆஸி போட்டியை பதற்றப்படுத்திய இருவர்!

சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆரோன் பின்ச் மற்றும் வார்னர் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய பந்து வீச்சாளர்கள் இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் திணறினர். நிதானமாக ஆடிய வார்னர் 28 வது ஓவரை வீசிய ஷமி பந்தில் 69 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் மறுபுறமு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்த கேப்டன் பின்ச் உடன் ஸ்மித் கைகோர்த்தார்‌. இருவரும் அணியின் ரன்ரேட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர்.

கேப்டன் பின்ச் (114) அதிரடியாக விளையாடி தனது சதத்தை பதிவு செய்தார். மறுபுறம் பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்துக்கொண்டிருந்த ஸ்மித்தும் (105) தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்களை விளாசி அசத்தியது. 375 ரன்கள் என்ற பெரிய இலக்கை கொண்டு களமிறங்கிய இந்திய அணியை 308/8 ரன்களில் சுருட்டினர் ஆஸ்திரேலிய அணி வீரர்கள். இதற்கிடையே, இந்தப் போட்டியின் நடுவே மைதானத்துக்குள் புகுந்த இருவரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

போட்டியின் 6வது ஓவரின்போது திடீரென மைதானத்துக்குள் புகுந்த பார்வையாளர்களில் இருவர் ``அதானிக்கு கடன் வழங்காதீர்கள்" என்ற பதாகைகளுடன் முழக்கமிட்டனர். இவர்களால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதன்பின் அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

More News >>