வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களை கவர்ந்த ஜியோ!
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2019 ம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 90 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. டிராய் வெளியிட்ட பட்டியலில் நிறுவனங்களின் புதிய வாடிக்கையாளர் சேர்ப்பு, நிறுவனங்களில் இருந்து பிரிந்த வாடிக்கையாளர் விவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி ரிலையன்ஸின் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த 2018 டிசம்பர் மாதம் 280.12 மில்லியனிலிருந்து 2019 டிசம்பர் மாதத்தின் இறுதி வரை 370.2 மில்லியன் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஜியோவின் சந்தை பங்கு வீதம் 2019 ம் ஆண்டு இறுதியில் தொலைத்தொடர்புத் துறையில் 32.14 சதவீதம் பங்கு உயர்ந்துள்ளது.
ஜியோவின் பங்கு ஒருபுறம் உயர்ந்து கொண்டே இருந்தாலும், மறுபுறம் வோடபோன், ஐடியா மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் பயன்பாடு குறைந்துள்ளதாக டிராய் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 2019 ம் ஆண்டில் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் இருந்து மட்டும் 86.13 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்திலிருந்து 12.96 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களின் அடிப்படை விகிதம் 418.75 மில்லியன் வாடிக்கையாளர்களில் இருந்து 332.61 மில்லியன் வாடிக்கையாளர்களாகக் குறைந்துள்ளது. இதன் பங்கு வீதம் 35.61 ல் இருந்து 28.89 சதவீதம் குறைந்துள்ளது.
இதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் அடிப்படை வாடிக்கையாளர் விகிதம் 340.26 மில்லியனிலிருந்து 327.30 மில்லியன் வாடிக்கையாளர்களாகக் குறைந்துள்ளது. இதன் சந்தை பங்கு வீதம் 28.93 ல் இருந்து 28.43 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் விகிதம், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர் விகிதத்தை விட உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிராயின் அறிக்கையின் படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் விகிதம் 3.74 மில்லியன் உயர்ந்துள்ளது. இதன் அடிப்படை வாடிக்கையாளர் விகிதம் 114.37 மில்லியனிலிருந்து 118.12 மில்லியன் உயர்ந்துள்ளது.
டிராயின் அறிவிப்பின் படி டிசம்பர் 2019 ல் அதிகபட்ச வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் அடிப்படையில் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் 370.87 மில்லியன் வாடிக்கையாளர்களோடு முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் நிறுவனம் 140.40 மில்லியன் வாடிக்கையாளர்களோடு இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 118.45 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 23.96 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. இதன்படி ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் சந்தையில் 57.56 பங்குகளைக் கொண்டு முதலிடத்தில் கோலோச்சுகிறது.