தாய், தங்கையுடன் சென்ற இளைஞரை தாக்கிய போக்குவரத்து காவலர்கள்!
சென்னை தியாகராய நகரில் தாய் மற்றும் சகோதரியுடன் சென்ற இளைஞருடன் ஏற்பட்ட தகராறில் அவரை, போக்குவரத்து காவல் துறையினர் தாக்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சென்னை வடபழனி தெருவில் வசிப்பவர் பிரகாஷ் (21) தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார். இவர், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க தனது தாயார் மற்றும் சகோதரியுடன் தி.நகருக்கு வந்துள்ளார். பொருட்களை வாங்கிய பின்னர் தனது தாய், சகோதரியுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்ப வந்துள்ளார்.
அப்போது போக்குவரத்து போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்து, தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதத் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதற்கு பிரகாஷ், 'தங்களிடம் வசதி இல்லை என்பதால் மோட்டார் சைக்கிளில் வருகிறோம்' என்று பிரகாஷ் கூறியுள்ளார்.
அதற்கு பணியில் இருந்த காவலர் ஒருவர், 'வசதி இல்லை என்றால் மூன்று பேர் ஆட்டோவில் வர வேண்டியது தானே?' என்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பிரகாஷிற்கும் மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் வீடியோ எடுக்க பிரகாஷும் வீடியோ எடுத்துள்ளார்.
மேலும், தன்னால் அபராதம் கட்ட இயலாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த போக்குவரத்து காவலர்கள் மூன்று பேர் கூட்டாக சேர்ந்து பிரகாஷைத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவரது தாயார் தனது மகனை விட்டு விடும்படி கெஞ்சியுள்ளார்.
மேலும் 3 பேரும் பொதுமக்கள் முன்னிலையில் காவல் அதிகாரிகள் 3 பேர் அந்த இளைஞரை பொதுமக்கள் முன்னிலையில் கம்பத்தில் பிடித்து வைத்து கைகளை முறுக்கும் காட்சிகளும், அவரது தாயாரும், சகோதரியும் அவரை விட்டுவிடும்படி கதறும் காட்சியும் வைரலாகி வருகிறது.
இது குறித்து தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரகாஷின் தாயார் சங்கீதா, ''தான் எவ்வளவோ கெஞ்சியும் போலீஸார் என் மகனை விடவில்லை, கெஞ்சி அழுது விட்டுவிடும் படி கேட்ட தன்னையும் தாக்கினார் ஒரு அதிகாரி'' என்று கூறியுள்ளார். இந்தக் காட்சிகளும் தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கிடையே போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து தகராறு செய்ததாக இளைஞர் பிரகாஷை 294 (b), 332,427 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், பிரகாஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com