சிசேரியன் செய்த இளம் பெண்ணின் வயிற்றுக்குள் பஞ்சு... டாக்டர்களின் கவனக்குறைவால் மீண்டும் அறுவை சிகிச்சை

சிசேரியன் செய்யப்பட்ட இளம் பெண்ணின் வயிற்றுக்குள் டாக்டர்கள் பஞ்சை வைத்துத் தைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த இளம்பெண்ணுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பஞ்சு வெளியே எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது.திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி. இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அல்பினா அலி (22). கடந்த செப்டம்பர் மாதம் இவர் இரண்டாவது பிரசவத்திற்காக திருவனந்தபுரம் தைக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது.

சிசேரியன் நடத்தப்பட்ட அன்றே அல்பினாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இது குறித்து அங்கு பணியில் இருந்த டாக்டரிடம் கூறியபோது, அது வாயுத் தொல்லையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். சில நாட்கள் கழித்து அல்பினா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீடு திரும்பிய பின்னரும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை. இதையடுத்து அருகிலுள்ள வேறு அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றுக்குள் பஞ்சு இருப்பதைப் பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அறுவை சிகிச்சை செய்து தான் பஞ்சை வெளியே எடுக்க முடியும் என்று டாக்டர்கள் கூறினர்.

ஆனால் அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வசதி இல்லாததால் அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மீண்டும் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து அந்தப் பஞ்சை வெளியே எடுத்தனர். இதுகுறித்து அல்பினாவின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா மற்றும் முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் செய்ய அல்பினாவின் பெற்றோர் தீர்மானித்துள்ளனர்.

More News >>