மதுரை வைகை ஆற்றில் பொங்கிய நுரை.. செல்லூர் பாலத்தில் டிராபிக் ஜாம்..

மதுரை வைகை ஆற்றில் திடீரென அசுத்தமான நுரை சுனாமி போல் பொங்கி வெளியேறியதால், செல்லூர் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வங்கக் கடலில் ஏற்பட்ட நிவர் புயல் கரையைக் கடந்த போது, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டியது. மதுரை போன்ற உட்புற நகரங்களிலும் சிறிதளவு மழை பெய்தது. இந்நிலையில், மதுரையில் நேற்றிரவு(நவ.27) திடீரென கனமழை கொட்டியது.

இதையடுத்து, வைகை ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வைகை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டிருந்தாலும் பல இடங்களில் கழிவு நீர் கலப்பதைத் தடுப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், வைகை ஆற்றில் மழைநீரும், கழிவு நீரும் கலந்து சென்றுள்ளது. இதனால் வைகை ஆற்றிலும் செல்லூர் ஏரி, குளங்களிலும் ஒரு விதமான கழிவு நுரை பொங்கியது.

விஷத்தன்மை உடையதாகச் சொல்லப்படும் இந்த நுரை பொங்கி, செல்லூர் பாலத்தின் மீது பரவியது. இதனால் அந்த வழியே வாகனத்தில் செல்வோருக்கு இடையூறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.இன்று காலையில் தீயணைப்புத் துறையினர் அப்பகுதிக்கு வந்து, வைகை ஆற்றின் ஒரு பகுதியில் திரண்டிருந்த நுரையைக் கலைக்கத் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு மொபைல் போனில் படம் பிடித்தனர். அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

ஏற்கனவே பவானி ஆற்றில் இப்படி கழிவுநீர் நுரை பொங்கிய போது, அமைச்சர் கருப்பணன் ஒரு கருத்துச் சொன்னார். மக்கள் சோப்பு போட்டுக் குளித்ததால் ஆற்றில் நுரை கட்டியுள்ளது என்று அவர் அடித்த கமென்ட் தமிழகத்தின் புகழை தேசம் முழுவதும் பறைசாற்றியது ஞாபகமிருக்கிறதா?

More News >>