தமிழக எம்.பி.க்களுக்கு உணர்வு இருந்தால் ராஜினாமா செய்யுங்கள் - தமிழிசை
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணர்வு இருந்தால் அனைவரும் ராஜினாமா செய்யுங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 5-ஆம் தேதியன்று தமிழகத்தின் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்க முடிவுசெய்துள்ளன.
இதற்கிடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “காவிரி பிரச்னையில் பாஜக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியில் மறுக்கப்பட்ட காவிரி பாஜகவால் வரும். அப்போது தமிழக மக்கள் கொண்டாடத்தான் போகிறார்கள். எங்களது பணி இன்னும் முடியவில்லை.
போராட்டம் மட்டும் இதற்குத் தீர்வாகாது. மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்று உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் அணையின் உரிமையை இழக்க வேண்டியிருக்கும். இதற்கு தமிழகம் ஒப்புக்கொள்ளுமா. அதை எதிர்த்து வழக்கு போட மாட்டார்களா. ஆகவே, சட்டரீதியாக மத்திய அரசு இந்த விவகாரத்தை அணுகிவருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் காவிரி விவகாரத்தில் நல்ல முடிவு வரும்.
தமிழகத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் தி.மு.க-வும் காங்கிரஸும் செயல்பட்டுவருகிறது. பாஜகவுக்குதான் தமிழகத்தின் வளர்ச்சியின்மீது அக்கறை இருக்கிறது. தமிழக மக்களுக்காகப் போராடி காவிரி நீரை பாஜக பெற்றுத்தரும். தமிழக எம்.பி-க்கள் ராஜினாமாகூட ஒழுங்காகச் செய்யவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணர்வு இருந்தால் அனைவரும் ராஜினாமா செய்யுங்கள்.
`காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம், மேகதாது அணை கட்டுவோம்' என்ற கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆனால், காவிரி நீருக்காக போராடும் திமுகவும் காங்கிரஸும் ஏன் சித்தராமையாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இங்கு நடக்கும் போராட்டங்கள் அனைத்துமே அரசியல் கட்சிகள் செய்யும் கண்துடைப்பு'' என்று தெரிவித்துள்ளார்.