உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கொலைமிரட்டல் 15 வயது சிறுவன் கைது
உத்திரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்திரப் பிரதேச மாநிலத்தில் அவசர உதவிக்காக 112 என்ற வாட்ஸ் ஆப் எண் உள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் இந்த எண்ணுக்குத் தகவல் அனுப்பினால் உடனடியாக போலீசார் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். 24 மணி நேரமும் இந்த எண்ணுக்குப் பொதுமக்கள் தங்களது புகார்களை அனுப்பலாம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த எண்ணுக்கு ஒரு செல்போன் நம்பரில் இருந்து ஒரு தகவல் வந்தது.
அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொல்லப்போவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவலைப் பார்த்த கட்டுப்பாட்டு அறை போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து லக்னோ சுஷாந்த் கோல்ப் சிட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.சைபர் கிரைம் போலீசாரும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் ஆக்ராவைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரின் 15 வயது மகன் தான் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தது எனத் தெரியவந்தது.
இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அந்த சிறுவனை போலீசார் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.