பீகாரில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் பிஏ துப்பாக்கியால் சுட்டுக் கொலை..
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் உதவியாளர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். பீகாரில் சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, மீண்டும் நிதிஷ்குமார் தலைமையில் ஜேடியு - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவியதால், வெறும் 0.03 சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இதுவும் பல தொகுதிகளில் மோசடியாக பெற்ற வெற்றி என்று லாலு மகன் தேஜஸ்வி தலைமையிலான ஆர்.ஜே.டி. கட்சியினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. அமரேந்திர பாண்டேவின் உதவியாளர் ஒருவர் நேற்று மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.வின் பிஏ யாரிடமோ பணம் வாங்கி மோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். எனினும், ஆட்சி அமைந்த சில நாட்களில் இப்படியொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது மாநிலத்தில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.