சூரப்பா மீதான விசாரணைக்கு தடை கோரி வழக்கு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை குறித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி சேர்ந்த மணி தணிக்கைகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சூரப்பா மீதான விசாரணை குறித்த அரசாணையை தடை செய்ய வேண்டும் என்று மனு செய்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் துணைவேந்தராக சூரப்பா பணிபுரிந்து வருகிறார். இவர் மீதும் மற்றும் இணை இயக்குனர் சக்திநாதன் துணைவேந்தர் சூரப்பா ஆகியோர் மீது முதல்வர் தனிப்பிரிவிற்கு ஆன்லைன் மூலம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ 200 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதில் தலா 13 முதல் 15 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர் சூரப்பா தனது மகளுக்கு சட்டவிரோதமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் அளித்துள்ளதாக வும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகார் திருச்சிராப்பள்ளியை சேர்ந்த சுரேஷ் என்ற பெயரிலான மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. புகாரில் கொடுத்துள்ள முகவரி, தொலைபேசி எண் ஆகிய அனைத்தும் போலியாக உள்ளது. சூரப்பாவின் மகள் ஏற்கெனவே பகுதிநேர பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த புகாரில் உண்மை தன்மை இல்லை. துணைவேந்தர் சூரப்பா மீது உள்ள புகாரை விசாரணை செய்ய வேண்டி உயர்கல்வித்துறை தலைமைச் செயலர் அரசாணை வெளியிட்டார். இதில் விசாரணை ஆணையம் நியமித்து விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை அண்ணா பல்கலைக்கழக பெயரையும் அதில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களை களங்கப்படுத்துவதாகவும் உள்ளது. துணைவேந்தரை விசாரணை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. உயர் அதிகாரி மீது புகார் கொடுக்கப்பட்டால் நோட்டீஸ் அனுப்பிய பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ஆனால் அவ்வாறு செய்யாமல் அரசாணை வெளியிட்டு துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை செய்வது ஏற்கத்தக்கது இல்லை.எனவே சூரப்பா மீது விசாரணை செய்ய இடைக்கால தடை விதிக்கவும், உயர்கல்வித்துறை தலைமைச் செயலர் வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது