சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது.. கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் எந்த விலக்கும் அளிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் உள்பட அனைவரும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் உள்பட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்படுகிறது என்று கேரள உயர்நீதிமன்றத்தில் புகார் கூறப்பட்டது. இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட எந்த பிளாஸ்டிக் பொருளையும் கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனால் அதன் பின்னரும் பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம், பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை பின்பற்றா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபரிமலை கோவில் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. இதன் பின்னர் தான் சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு வெகுவாக குறைந்தது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இருமுடி கட்டில் உள்பட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுவர கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா காலம் என்பதால் கையுறை, சானிடைசர், முகக் கவசம் உள்பட பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்த வேண்டி இருப்பதால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் சில நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று கோரி சபரிமலை கோவில் நிர்வாகம் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எந்தக் காரணம் கொண்டும் சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என உத்தரவிட்டது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்து ஏற்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவில் நிர்வாகம் தாக்கல் செய்துள்ள மனுவில், பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை எப்படி, எவ்வாறு அப்புறப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.