ரயில்வே கேட்டில் வாகனத்தால் மோதி விபத்து ஏற்படுத்தினால் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?

ரயில்வே கேட்டில் வாகனத்தால் மோதி விபத்தை ஏற்படுத்துபவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதன்படி ரயில்வே கேட்டில் வாகனத்தால் மோதினால் 5 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 31,846 ரயில்வே கேட்டுகள் உள்ளன. இதில் 13,500 க்கும் மேற்பட்ட கேட்டுகளில் கேட் கீப்பர்கள் கிடையாது. அனைத்து ரயில்வே கேட்டுகளிலும் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ரயில்வே ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் ரயில்வே கேட்டுகளில் நடக்கும் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த வருடம் 1788 விபத்துக்கள் நடந்தன.

இது 2018ம் வருடத்தை விட 20 சதவீதம் அதிகமாகும். கடந்த வருடம் ரயில்வே கேட்டில் நடந்த விபத்துக்கள் மூலம் 1,762 பேர் மரணமடைந்தனர். 2018ல் பலியானவர்கள் எண்ணிக்கை 1,507 ஆகும். ரயில்வே கேட்டுகளில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தான் அனைத்து கேட்டுகளிலும் கேட் கீப்பர்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் தீர்மானித்தது. மேலும் பல பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரயில்வே கேட்டில் வாகனங்கள் மோதுவதை தடுக்க ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதன்படி வாகனத்தால் மோதுபவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கேட்டில் வாகனத்தால் மோதினால் ரயில்வே சட்டம் 154ன் படி சாதாரண வழக்கு தான் பதிவு செய்யப்படும். ஆனால் தற்போது ரயில்வே சட்டம் 160 (2)ன் படி வழக்கு பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். முன்பு ரயில்வே கேட் மூடப்பட்ட பின்னர் வாகனத்தால் மோதினால் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படும். ஆனால் தற்போது கேட்டை மூடும்போதோ அல்லது திறக்கும்போதோ மோதினால் கூட தண்டனை கிடைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டால் ஜாமீனும் கிடைக்காது.

More News >>