ஆஸி. மோசமான தோல்வி - 492 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 492 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்றது. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் தென் ஆப்பிரிக்காவும், ஒன்றில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்று இருந்தன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பெருத்த சிக்கலை சந்தித்த ஆஸ்திரேலியா அணி ஸ்மித், டேவிட் வார்னர் இன்றி வலுவில்லாமல் காணப்பட்டது. இதில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 488 ரன்கள் எடுத்தது.
மார்க்ரம் 152 ரன்கள் எடுத்தார். டெம்போ பவுமா 95 ரன்களும், ஏபி டி வில்லியர்ஸ் 69 ரன்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய கேஷவ் மஹாராஜ் தனது பங்குக்கு 51 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 221 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக தற்காலிக கேப்டன் பெய்ன் 62 ரன்களும், உஸ்மான் கவாஜா 53 ரன்களும், கம்மின்ஸ் 50 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா, பிளாந்தர், கேஷவ் மஹாராஜ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பாலோ ஆன் வழங்காமல் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்தது. கேப்டன் டு பிளஸ்ஸி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஆஸ்திரேலியாவின் டார்கெட் 400, 500 என தாண்டி சென்றபோதும் விடவில்லை. அதே சமயம் இந்த தொடரில் சொதப்பி வந்த அவர் 140 ரன்கள் எடுத்து வெளுத்து வாங்கினார். டீன் எல்கர் 81 ரன்கள் எடுத்தார்.
இதனால், ஆஸ்திரேலியா அணிக்கு 612 ரன்கள் என்ற இலக்கை தென் ஆப்பிரிக்க நிர்ணயித்தது. ஆனால், ஆஸ்திரேலியா அணி கத்துக்குட்டி அணியில் மோசமாக ஆடியது. 88 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி அடுத்த 21 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
இதில், ஜோ பர்ன்ஸ் 42 ரன்களும், ஹாண்ட்ஸ்கோப் 24 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினர். அபாரமாக பந்துவீசிய வெர்னன் பிளாந்தர் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனால், ஆஸ்திரேலியா அணி 492 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது. ஆட்ட நாயகனாக 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய வெர்னன் பிளாந்தர் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக ரபாடா தேர்ந்தெடுக்கப்பட்டார். 4 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை கைப்பற்றியது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com