தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் செஞ்சுரி அடித்து அசத்திய ஸ்மித்
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் இன்று தொடர்ந்து இரண்டாவது முறையாக செஞ்சுரி அடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணி, முதல் ஒருநாள் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் இமாலய ஸ்கோரை எட்டி வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி 27ம் தேதி சிட்னியில் நடந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமாக ஆடி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 374 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் கேப்டன் பிஞ்சும், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் செஞ்சுரி அடித்தனர்.
டேவிட் வார்னரும் தன் பங்குக்கு அரைசதம் அடித்து சிறப்பாக ஆடினார். பின்னர் ஆடிய இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இன்று சிட்னியில் நடைபெற்று வரும் 2வது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா முதல் போட்டியைப் போலவே மிக அபாரமாக ஆடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னரும், கேப்டன் பிஞ்சும் மிகச் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து 142 ரன்கள் சேர்த்தனர்.
69 பந்தில் ஒரு சிக்ஸ் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 60 ரன்கள் எடுத்த பிஞ்சை முகமது ஷமி ஆட்டமிழக்க வைத்தார். பின்னர் டேவிட் வார்னர் 83 ரன்களில் ரன் அவுட்டானார். பிஞ்ச் ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் வழக்கம்போல அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். இவர் 62 பந்தில் சதம் அடித்து அசத்தினார். 104 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் பந்தில் முகமது ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் ஸ்மித் செஞ்சுரி அடித்து சாதனை படைத்துள்ளார்.