ஒரு சதம், 4 அரை சதம், 389 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா.. இந்தியா சமாளிக்குமா?

முதல் போட்டியைப் போலவே இன்று நடைபெறும் 2வது போட்டியிலும் ஆஸ்திரேலியா இமாலய ஸ்கோரை எட்டியுள்ளது. ஸ்டீவ் ஸ்மித்தின் ஒரு செஞ்சுரி மற்றும் 4 அரைசதங்களின் துணையுடன் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்கள் குவித்துள்ளது. நேற்று முன்தினம் சிட்னியில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் பரிதாப தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 374 ரன்கள் குவித்தது. கேப்டன் ஆரோன் பின்ச், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சதமடித்தனர்.

அதேபோல இன்றைய போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் மிக அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். இன்றைய போட்டியில் தொடர்ச்சியாக ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது சதம் அடித்தார். வார்னர், பின்ச், மேக்ஸ்வெல் மற்றும் மார்னஸ் லபுஷெய்ன் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இவர்கள் துணையோடு ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்கள் குவித்துள்ளது. இன்றைய போட்டியிலும் ஸ்மித் மிக அபாரமாக ஆடினார். சமீபத்தில் முடிந்த ஐபிஎல் 13வது சீசனில் ஒருநாள் போட்டியில் ஆடுவது போல சற்று மெல்ல விளையாடிய ஸ்மித், தற்போது 2 ஒருநாள் போட்டியிலும் டி20யில் விளையாடுவது போல அதிரடியாக ஆடினார்.

இவர் இன்றைய போட்டியில் 62 பந்துகளில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தரப்பில் பந்துவீசிய 7 பேரும் சராசரியாக 6 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். ஜஸ்பிரித் பும்ரா 10 ஓவரில் 79 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். ஹார்திக் பாண்டியா 4 ஓவரில் 24 ரன்களும், முகமது ஷமி 9 ஓவரில் 73 ரன்களும் விட்டுக் கொடுத்து தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். நவ்தீப் சைனி 7 ஓவரில் 70 ரன்களும், யுஸ்வேந்திர சாஹல் 9 ஓவரில் 71 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 10 ஓவரில் 60 ரன்களும் விட்டுக் கொடுத்தனர். ஒரு ஓவர் மட்டுமே வீசிய மாயங்க் அகர்வால் 10 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

More News >>