நடிகை கார் விபத்தில் டாக்டர் உள்ளிட்ட 3 பேர் பலி...
கன்னட நடிகை உமாஸ்ரீ, இவர் கன்னடத்தில் 400க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணசித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். 2008ம் ஆண்டு குலாபி டாக்கிஸ் படத்தில் சிறப்பான நடிப்பை வெளியிட்டதற்காக தேசிய விருதும் வென்றார். இவர் அரசியலிலும் ஈடுபட்டிருக்கிறார். கர்நாடக அரசியலில் ஈடுபட்ட இவர் பிறகு பெண்கள் குழந்தைகள் நல துறை அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.
உமாஸ்ரீயின் காரில் பெஹெல் ஹாரா கிராமத்தை சேர்ந்த மருத்துவ அதிகாரி டாக்டர் ஸ்மிதா மற்றும் அவரது தாயார் சென்றனர். கட்டககிலிருந்து ஹூப்ளிக்கு கார் சென்றுக்கொண்டிருந்தது. டிரைவர் காரை ஓட்டினார். காரில் உமாஸ்ரீ இல்லை. பாண்டிவாடா பகுதியில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு கார் மீது எதிர்பாராத விதமாக உமாஸ்ரீ கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஸ்மிதாவின் தாயார் மற்றும் கார் டிரைவர் பலியானார்கள்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த டாக்டர் ஸ்மிதாவை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனில்லாமல் நேற்று அவர் மரணம் அடைந்தார். முன்னதாக உமாஸ்ரீ விபத்து நடந்த மறுநாள் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்த டாக்டர் ஸ்மிதா உடல்நிலை பற்றி விசாரித்தார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.