முக கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு
இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோருக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தினந்தோறும் கொரோனாவுக்கு பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அனைத்து மாவட்டங்களும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். சென்னை, கோவை, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஈரோடு மற்றும் காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பரிசோதனை அளவு ஒருபோதும் குறையக்கூடாது. 100 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டால் அதில் எத்தனை பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது என்ற பாசிடிவிடி ரேட் 2 சதவீதத்துக்கும் குறைவாக கொண்டு வர செயலாற்ற வேண்டும்.
இறப்பு விகிதம் கணிசமாக குறைக்கப்பட வேண்டும். சிறப்பு சிகிச்சை விதிமுறைகளை கடைபிடித்து இறப்பு இல்லை என்ற நிலையை நோக்கமாக கொண்டு பணியாற்ற வேண்டும். தொற்றில் இருந்து குணமான பின்னர் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தி, கொரோனா சிகிச்சைக்கு பிந்தைய நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். தமிழகத்தில் 30 சதவீதத்துக்கும் குறைவான நபர்களே முக கவசம் அணிவதாக தெரியவருகிறது. மார்க்கெட், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், சமூக மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் உள்பட பொது இடங்களில் கொரோனா ஒழுங்கு முறைகள் மற்றும் வழிகாட்டு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுவது இல்லை.
இந்த நடைமுறைகளை பின்பற்றாத குறிப்பாக முக கவசம் அணியாதவர்கள், திருமண மண்டப உரிமையாளர், திருமணம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதியுங்கள். தேவைப்படின் கண்டிப்பான நடவடிக்கை எடுங்கள். வணிக வளாகங்கள், பணி செய்யும் இடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு அதன் உரிமையாளர்களை பொறுப்பாக்கவேண்டும். இங்கெல்லாம் வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். விழாக்காலங்களில் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றாததால் ஏற்படும் நோய் பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை இப்போது எடுக்க வேண்டும். மழை மற்றும் குளிர் காலத்தில் நோய் தொற்று அதிகரித்தால், அதனை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதை கலெக்டர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தகுந்த நடவடிக்கைகளை இப்போது எடுக்கவில்லை என்றால், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் எல்லாமே வீணாகிவிடும். அதனால் நோய் தடுப்பு முறைகள் பொது இடங்கள், பணி இடங்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்படுகிறதா? என்று கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டும். நோய் தடுப்பு முறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் அபராதம் விதிக்கப்பட வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்புடன் பின்பற்றி கொரோனா பரவலை தடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாதிரி மாநிலம் என்ற அந்தஸ்தை பெற கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.