சபரிமலையில் போலீசார், ஊழியர்களுக்கு கொரோனா பரவல் அதிகரிப்பு பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிக்கல்
சபரிமலையில் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வழக்கமாக மண்டல பூஜைகளின் போது சபரிமலையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.
ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாகப் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1,000 பேரும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பேரும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தரிசனத்திற்குச் செல்லும் போது 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் கொண்டு செல்ல வேண்டும்.
சபரிமலையில் மண்டலக் காலத்தில் தினமும் சராசரியாக 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கிடைப்பது உண்டு. ஆனால் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் கோவில் வருமானம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தினமும் சராசரியாக 10 லட்சத்திற்கும் குறைவாகவே வருமானம் கிடைத்து வருகிறது. இதனால் கோவில் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுதவிர சபரிமலையில் ஓட்டல்கள், கடைகள் உட்பட நிறுவனங்களில் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளன. இதன் மூலமும் சபரிமலை கோவில் நிர்வாகத்திற்குக் கிடைக்கும் வருமானம் குறைந்துவிட்டது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தது.
தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. இதுகுறித்து கேரள அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக ஆலோசித்து வந்தனர். கேரள தலைமைச் செயலர் தலைமையிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் கடந்த இரு வாரங்களில் கோவில் ஊழியர்கள், போலீசார் உள்பட 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியது.
இதையடுத்து உடனடியாக பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டாம் என்று தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அதிகரிப்பதாக இருந்தால் திங்கள் முதல் வெள்ளி வரை 2,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3,000 பக்தர்களையும் மட்டும் அனுமதிக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.