குமுளி கோவிட் சோதனைச் சாவடி அகற்றம்
கேரள மாநிலம் குமுளியில் இயங்கிவந்த கோவிட் சோதனைச் சாவடி நேற்று முதல் அகற்றப்பட்டது. இதன் காரணமாகத் தமிழக கேரள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடெங்கும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாநிலங்களுக்கிடையே செல்ல நடைமுறை கொண்டு வரப்பட்டது. கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த நடைமுறை விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதேசமயம் கேரளாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்ததால் அங்குச் செல்ல எல்லைப்பகுதியில் இ பாஸ் சோதனை, டோக்கன் பெறுதல் போன்ற நடைமுறை இருந்து வந்தது. நேற்று முதல் இந்த நடைமுறையை விலக்கிக் கொள்ளப்பட்டு இ பாஸ் மற்றும் டோக்கன் பெறுவது தேவையில்லை எனக் கேரள அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழக-கேரள இரு மாநிலங்களுக்கிடையே பொதுமக்கள் சென்று வர இனி சிரமமில்லை. இதனால் தமிழக கேரள மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக கேரள மாநில எல்லைப்பகுதியான குமுளியில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய சோதனைச் சாவடியில் தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பொது மக்களை கோவிட் சோதனை செய்து இ பாஸ் பரிசோதனை செய்து பல கட்டுப்பாடுகளை வித்து கேரள மாநிலத்திற்குள் அனுமதித்தது.கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அதிகப்படியாகத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. ஏலத் தோட்டங்கள் பெரும்பாலும் தேனி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு உள்ளது. எனவே ஏலத் தோட்டத்தில் வேலைக்காகத் தினமும் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் ஜீப்கள் மூலம் இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்தனர்.
இவர்கள் இ பாஸ் பெற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையே அனுமதிக்கப்பட்டனர். கோவிட் சோதனைக்கு குமுளி சோதனை சாவடியில் பல மணிநேரம் காத்துக் கிடக்கும் நிலையும் இருந்து வந்தது.இந்த நிலையில் கேரள அரசு உத்தரவின்படி குமுளியில் இயங்கிவந்த கோவிட் சோதனைச்சாவடி முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது.எனவே இரு மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து முன்புபோல் சீராகி உள்ளது. இரு மாநில மக்களும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி சென்று வருகின்றனர்.