நடிகை பலாத்கார வழக்கில் நடப்பது என்ன? பரபரப்பு தகவல்கள்

பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தப்ப வைக்கச் சதி நடக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.கடந்த 3 வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகை ஒருவர் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் போது ஒரு கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அந்த நடிகையிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்த சுனில் குமார் என்பவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் தான் இதற்குச் சதித்திட்டம் தீட்டினார் எனத் தெரியவந்தது.

இதையடுத்து நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் திலீப் 8வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் 85 நாட்களுக்குப் பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு முதலில் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், பின்னர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஒரு பெண் நீதிபதி தலைமையில் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகப் பாதிக்கப்பட்ட நடிகையும், அரசுத் தரப்பும் குற்றம் சாட்டியது பெரும் பரப்பை ஏற்படுத்தியது. விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்று கோரி உயர் மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், 2 வாரங்களுக்கு விசாரணையை நிறுத்தி வைத்தது. இதன் பின்னர் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நீதிமன்றத்தை மாற்றத் தேவையில்லை என்றும், விசாரணையை உடனடியாக தொடங்கலாம் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த வாரம் விசாரணை மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் திடீரென அரசுத் தரப்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மீண்டும் விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கைத் திசை திருப்பச் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன.இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் செயல்பட்டுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள ஒரு தகவலில் கூறி இருப்பது: இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்தே குற்றவாளிகளைக் காப்பாற்ற ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தலையிட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நடிகரின் நெருக்கமானவர்களை அரசுத் தரப்பு சாட்சிகளாகச் சேர்த்து பின்னர் அவர்களை பல்டியடிக்க வைத்தனர்.

இது இந்த வழக்கில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. விசாரணை நீதிமன்றத்திலிருந்து நீதி கிடைக்காது என்று தெரிந்திருந்தும் தொடக்கத்திலேயே அது தொடர்பாக மேல் நீதிமன்றத்திடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. முக்கிய சாட்சிகள் உட்பட அனைவரையும் விசாரித்து, அவர்கள் பல்டியடித்த பின்னர் தான் உயர்நீதிமன்றத்தில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது. பலாத்காரத்திற்கு இரையான ஒருவரிடம் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை மீறி எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் கேள்விகளைக் கேட்டபோது அதற்கு விசாரணை நீதிமன்றம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து அரசுத் தரப்பு உடனடியாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டும்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நடிகருக்கு மட்டுமே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வேறு யாருக்கும் இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. மேலும் அவரை அடிக்கடி வெளிநாட்டுக்குச் செல்ல விசாரணை நீதிமன்றம் அனுமதித்தது வியப்பாக இருக்கிறது. முக்கியமான ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ள ஒருவரை எப்படி நீதிமன்றம் பலமுறை வெளிநாடு செல்ல அனுமதித்தது எனத் தெரியவில்லை. இந்த வழக்கைத் திசை திருப்பத் துபாயில் வைத்து சதித்திட்டம் நடந்துள்ளது. அதில் சில முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இது தவிர ஒரு மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி, ஆளுங்கட்சி எம்எல்ஏ மற்றும் முக்கிய நடிகர் ஆகியோரும் இந்த வழக்கைத் திசை திருப்ப கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>