வங்கக் கடலில் மீண்டும் உருவாகும் புதிய புயல்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவும், அது புயலாக மாறி டிசம்பர் 2ம் தேதி கரையைக் கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் கரையைக் கடந்ததும் சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டியது. கடலூர், புதுச்சேரியில் பலத்த சேதங்களும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல் உருவெடுக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இலங்கையில் திரிகோணமலையில் இருந்து 750 கிமீ, கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 1150 கிமீ தொலைவிலும் உள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறலாம். அதிலிருந்து மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பிருக்கிறது. புயலாக மாறினால் அது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் பயணித்து டிச.2ம் தேதி மாலையில் இலங்கை கடற்கரையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.