காங்கிரஸிலிருந்து விலகி கட்சி மாறும் இன்னொரு பிரபல நடிகை?

காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நடிகை குஷ்பு. பல ஆண்டுகளாக அவர் பாஜவினர் பற்றியும் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று காங்கிரஸிலிருந்து விலகி பாஜ கட்சியில் சேர்ந்தார். தற்போது மற்றொரு பிரபல நடிகை காங்கிரஸிலிருந்து விலகி வேறு கட்சியில் சேர்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது.நடிகை ஊர்மிளா. இந்தியில் ரங்கீலா படத்தில் நடித்து பிரபலம் ஆனார்.

தமிழிலும் இந்தியன் படத்தில் நடித்தார். சத்யா, ஏக் ஹசீனா போன்ற பல படங்களில் இவர் நடித்தார். இவர் சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் தேர்தலில் பாஜ வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

சமீபத்தில் கங்கனா ரனாவத் மும்பை பற்றி அவதூறாகப் பேசினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்போல் மும்பை உள்ளதாகத் தெரிவித்தார். அதற்கு சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் அவரது உருவ பொம்மைகளையும் சிவசேனா தொண்டர்கள் தீயிட்டுக் கொளுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். அந்நேரத்தில் கங்கனாவின் பேச்சுக்கு நடிகை ஊர்மிளா கடுமையாகப் பதில் அளித்தார். உலக அளவில் மும்பை புகழ் பெற்றது அதன் புகழை கங்கனா கெடுக்கிறார் என்றார்.

இந்நிலையில் சிவசேனாவிலிருந்து ஊர்மிளாவுக்கு அழைப்பு வந்துள்ளது. தங்கள் கட்சியில் சேர அழைத்துள்ளனர். அத்துடன் மேல் சபை உறுப்பினர் பதவியும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான பட்டியலை சிவசேனா கட்சி கவர்னருக்கு அனுப்பி வைக்க அவர் அதற்கு அனுமதி வழங்கி உள்ளாராம். அந்த பட்டியலில் ஊர்மிளா பெயரும் இடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து சிவசேனா கட்சியில் ஊர்மிளா விரைவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் உத்தவ் தாக்ரே மற்றும், கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து இணைவார் என்று தகவல் பரவி வருகிறது.

More News >>