தமிழர்களை போல பெண்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் - கே.ஜே.யேசுதாஸ்
தமிழர்கள் பெண்களை அம்மா என்றுதான் அழைக்கிறார்கள். இதேப்போல பெண்களுக்கு அனைவரும் மரியாதை அளிக்க வேண்டும் என்று பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி உண்டு. பிரபல பாடகர் கே.ஜெ.யேசுதாஸ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் கோயில் அதிகாரிகள் அவரை தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை.
கிறிஸ்துவராக இருந்தபோதிலும் இந்து மதத்தில் நம்பிக்கை உடையவர். இவரின் ஹரிவராசனம் பாடல் தான் சபரிமலையில் ஒலிக்கிறது. சபரிமலையில் இவருக்கு தரிசனம் செய்ய அனுமதி உண்டு. குருவாயூர் கிருஷ்ணனுக்காக யேசுதாஸ் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார்.
இந்நிலையில் திருச்சூரில், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் யேசுதாஸ். அவர் பேசிய அவர், “குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நான் நுழைய சிறப்பு அனுமதி கோரவில்லை. என்னை அனுமதிப்பது பற்றி கோவில் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். விலக்கப்பட்டவர்களை அனுமதிக்கும் வரை கண்டிப்பாக என்னை அனுமதிக்க போவது இல்லை.
உண்மையாக கடவுளை நேசித்து தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் போது அதில் கடைசி ஆளாக நான் இருப்பேன். குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் என்னை அனுமதிக்கும் வரை வேறு எந்த கிருஷ்ணன் கோவிலையும் நான் தரிசிக்க போவது கிடையாது.
அனைவரும் வேதம் படித்தால் நாட்டில் சமாதானம் ஏற்படும். பூணூல் போடுவதாலோ, ஞானஸ்நானம் செய்வதாலோ பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. நமக்குள் இருப்பதுதான் தெய்வம். தமிழர்கள் பெண்களை அம்மா என்றுதான் அழைக்கிறார்கள். இதேப்போல பெண்களுக்கு அனைவரும் மரியாதை அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com